June 24, 2018

கல்லூரி கனவலைகள்!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
காலங்கள் உருண்டோடியிருந்தாலும்,
ஏற்ற தாழ்வுகள் பல கடந்திருந்தாலும்,
சாதனைகள் படைத்தது வான்புகழ் பெற்றிருந்தாலும்,
நாம் பெற்ற பிள்ளைகள் தோளைத் தாண்டி வளர்ந்திருந்தாலும்,
காதருகே கேசத்தில் சாம்பல் பூத்திருந்தாலும்,
எண்ணிய கணமே வதனத்தில் புன்முறுவலை வரவழைப்பது
விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட,
கல்லூரியின் வசந்த கால நினைவலைகள் மட்டுமே!
அதில், நம் பண்ணாரி அம்மன் கல்லூரி நாட்கள்
தனியிடம் வகிக்க தன்னலமற்ற, தாத்பரியம் கடந்த
தோழமையுணர்வே காரணம்!

நாம் பயின்ற கல்லூரி படைத்த
பதினெட்டு வருட சந்ததியினரை
பசுமை நிறைந்த பூங்காவில்,
அவர்தம் குடுபத்துடன் காண
ஹ்ருதயமானது ஆர்பரித்திருந்தது.

ஜூன் 24 ஆம் தேதிக்காக
கனவுகள் பல சுமந்து காத்திருந்தோம்.

ஆதவனின் உதயம் காரிருளை அகற்ற
வரவிருக்கும் சகதோழர் மற்றும்
குடும்பத்தாருக்கு உணவளிக்க வாக்களித்தோர்,
அவர்தம் மனையாள், மாதாவின் துணைகொண்டு,
அறுசுவை உணவைச் சமைத்து, எடுத்துக்கொண்டு,
குடும்பத்துடன் பெங்களூரு கப்பன் பூங்கா செல்ல ஆயத்தமானார்கள்

பூங்காவின் பால பவன் முன் கூடி,
பரஸ்பர அறிமுகம் ஆனபின் பூங்காவிற்க்குள்  பிரவேசித்து,
குழந்தைகளோடு குழந்தைகளாய் சிறிய ரயில் பயணம்,
வானுயர்ந்த விசைப்படகு, சுழல்நாற்காலி நடன விளையாட்டு,
என விளையாடியும், பின் பனி கூல் ருசித்தும்,
முற்பகலை ஆனந்தமாககளித்தோம்!


மதிய உணவின் போது,
பல வீட்டின் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது,
அறுசுவையின் அர்த்தம், நாம் கொணர்ந்த
அறுவகை உணவான - எலுமிச்சைசாதம்தக்காளிசாதம்,
புளிசாதம்தயிர்சாதம்ஜிலேபி மற்றும்
குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த
உருளைக்கிழங்கு சிப்ஸ் மூலம் ஊர்ஜிதமானது!

தோழர் தோழியரோடு ஒரு கலந்துரையாடல்,
கடின உழைப்பு, சாமர்த்திய உழைப்பின் வரிசையில் 
வலையமைப்பு வருங்காலத்தை வசந்தகாலமாக்கும்
என்றெடுத்துறைத்தார் மூத்த சகோதரர் ஒருவர்.
முன்னாள் மாணவர்களின் மூலம் சகதோழர்களுக்கும்,
சமுதாயத்திற்கும், நம் கல்லூரியின் வருங்கால மாணவர்களுக்கும்,
உறுதுணையாக நிற்கும் யுக்தி பற்றி விவாதித்தோம்.

பிள்ளைச்செல்வங்களுக்கு நினைவுப் பரிசொன்று
தராமல் இந்நிகழ்வுதான் நிறைவுபெறுமோ ?
நமது இளம் தோழர்கள் பரிசுப்பொருட்களை வழங்க
அகமகிழ்ந்து பெற்றுக்கொண்டனர் குழந்தைகள்.

இச்சந்திப்பு, பெங்களூருவின் ஐந்தாவது அத்தியாயத்தின் முடிவு - ஆனால்
பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி,
முன்னாள் மாணவர்களின் மனக்கோட்டைக்கான அஸ்திவாரம்.
பயின்ற வித்யையின் துணை கொண்டு,
அக்கோட்டையை பலபடுத்த வாரீர்.

மிகவிரைவில் மீண்டும் சந்திப்போம்!



Bhuvaneswari Subramani
BIT CSE 1996 - 2000
This article was published in BIT Sathy Alumnae News Letter July 2018 edition.

No comments:

Post a Comment